Saturday, March 2, 2013

கோயில்கள்:

கோயில்கள்:
கோயில்கள் நமது பண்பாட்டின் சின்னங்கள். இன்று இறை வழிபாட்டிற்கு மட்டுமே என்ற அளவில் இருக்கும் கோயில்கள்,நமது முன்னோர்களுக்கு வாழ்க்கையுடனும் சமுதாயத்துடனும் பின்னிப் பிணைந்த ஒரு ஆதார தலமாக இருந்தது. முக்கியச் செய்திகளை விவாதித்து முடிவெடுக்கவோ, அச்செய்திகளை அனைவரும் அறியுமாறு பதிவு செய்து பத்திரப்படுத்தவோ, இயல் இசை நாடகங்களை கூடி இரசிக்கவோ, வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றிய அறிவுச் சொற்பொழிவுகளை கேட்டு மகிழவோ, தமது வாழ்வின் மங்கள நிகழ்ச்சிகளைக் கொண்டாடவோ மக்கள் நாடியது கோயில்களையே.நமது முன்னோர்களுக்கிருந்த வரலாற்று நோக்கு அவர்களைத் தமது ஊர் சார்ந்த செய்திகளைக் கோயில்களின் கருங்கல் சுவர்களில் கல்வெட்டாய்ப் பொறிக்க வைத்தது. கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டு காலத் தென்னிந்திய வரலாற்றை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவுவது கோயில்களில் உள்ள கல்வெட்டுகளே. நமது முன்னோர்களின் கலைத்திறனுக்குச் சான்று வேண்டுமா, செல்லுங்கள் கோயில்களை நோக்கி. கோயில்களில் உள்ள சிற்பங்களின் வடிவில் உள்ள முந்தைய கால வீரர்களும் நாரீமணிகளும், ஆயிரம் ஆண்டுகளாய் அழியாமல் ஒரு சிலகோயில்களில் இன்றும் பேசாமல் பேசும் உயர்சித்திரங்களும் நமது மூதாதையர்கள் கொண்டிருந்த உயர் கலைத்திறனை, உள்ளத்தில்தோன்றியதையும், தாம் பார்த்தஅன்றாட நிகழ்வுகளையும் கல்லிலே செதுக்கி ஓவியத்திலே காட்சிகளாய் விரித்த அவர்களின் கைவித்தையைப் பறைசாற்றும்.
இசை, நாட்டியம் நாடகம், ஓவியக்கலை எனப் பல கலைகளும் தமிழ் நாட்டினருடன் பின்னிப் பிணைந்து வளர்ந்திருந்ததை நமக்குச் சங்க இலக்கியங்களும் அதற்குப் பின் வந்த இரட்டைக்காப்பியங்களான, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவையும் தெளிவாக விளக்குகின்றன.

வி.ராஜமருதவேல்.

No comments:

Post a Comment